×

ரூ.13 கோடி வருவாய் வரும் பழநி நகராட்சிக்கு தேவை சிறப்பு நிலை அந்தஸ்து: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பழநி: ஆண்டுக்கு ரூ.13 கோடி வருவாய் வரும் பழநி நகராட்சிக்கு சிறப்புநிலை அந்தஸ்து வழங்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சி 6.63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கடந்த 1988 டிச.1 முதல் தேர்வுநிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நகரின் மொத்த மக்கள் தொகை 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70,456 ஆகும். நகரில் உள்ள முருகன் கோயில் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குகிறது. இந்நகருக்கு சாதாரண நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகிய திருவிழா காலங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் வந்து செல்கின்றனர். பழநி நகரில் வசிக்கும் மக்களுக்கும், பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் குடிநீர், பொது சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2008ல் ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் உள்ள நகராட்சிகளை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு அறிவிப்பு வெளியானது. தற்போது பழநி நகராட்சியில் இயல்புநிலை கணக்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவாய் நிதி, குடிநீர் மற்றும் கல்வி நிதி என 3 நிதிகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நகராட்சியின் வருவாய் தற்போது சுமார் ரூ.13 கோடியை தாண்டி உள்ளது. எனவே, பழநி நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியில் இருந்து, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பழநி நகராட்சித்தலைவர் உமா மகேஷ்வரியிடம் கேட்டபோது கூறுகையில், ‘‘பழநி நகருக்கு சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து கிடைத்தால் கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். அதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தலாம். இதற்காக பழநி நகர்மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாரும் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி உள்ளார்’’ என்றார்.

The post ரூ.13 கோடி வருவாய் வரும் பழநி நகராட்சிக்கு தேவை சிறப்பு நிலை அந்தஸ்து: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Palani ,Municipality ,Palani Municipality ,Dinakaran ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை